ஜிம்பாப்வே நாடு, இங்கிலாந்திடம் இருந்து 1980–ம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற காலம் முதல், அந்த நாட்டில் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்து, ஆட்சி நடத்தியவர் ராபர்ட் முகாபே (வயது 93). அவருக்கு பின்னர் அதிபர் பதவியை அடைவதற்கு துணை அதிபராக இருந்த எமர்சன் மனன்காக்வா திட்டமிட்டார்.

ஆனால், முகாபேயின் மனைவி கிரேஸ் முகாபேவும் களத்தில் குதித்தார். இந்த அதிகார போட்டியில் மனைவிக்கு ஆதரவாக செயல்பட்ட முகாபே, மனன்காக்வாவை பதவியில் இருந்து நீக்கினார். இதில் உட்கட்சி மோதல் வெடித்தது. ராணுவம் களத்தில் குதித்தது.
கடந்த 15–ம் தேதி அதிபரின் அதிகாரத்தை ராணுவம் அதிரடியாக பறித்தது. அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து ராணுவம், தலைநகர் ஹரேரேயில் வலம் வந்தது.

கடந்த சனிக்கிழமையன்று மக்களும் முகாபேவுக்கு எதிராக அணிவகுத்து மாபெரும் எழுச்சி பேரணி நடத்தினர்.
இந்த நிலையில் ஆளும் ஜானு பி.எப். கட்சியின் முக்கிய கூட்டம் நேற்று (19-11-2017) ஹராரே நகரில் நடந்தது. இதில் கட்சித் தலைவர் பதவியில் இருந்து முகாபே நீக்கப்பட்டார். அவரது இடத்துக்கு முன்னாள் துணை அதிபர் எமர்சன் நாங்காக்வா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
0 Comments