உகாண்டா என்றழைக்கப்படும் உகாண்டாக் குடியரசு கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் எல்லைகளாக கிழக்கில் கென்யாவும் வடக்கில் சூடானும் மேற்கில் காங்கோவும் தென்மேற்கில் ருவாண்டாவும் தெற்கில் தான்சானியாவும் உள்ளன. இதனுடைய தலைநகரம் கம்பாலா ஆகும். இதன் மொத்த பரப்பளவு 2,36,040 சதுர கிலோ மீட்டர். நிலநடுக்கோட்டுப் பகுதியில் நிலத்தால் சூழப்பட்டுள்ளது. இதன் பெரும்பகுதி பீடபூமியில் அமைந்துள்ளது. எரிமலைத் தொடர்கள் கிழக்கிலும் மேற்கிலும் எல்லைகளாக அமைந்துள்ளன. எல்கான் மலை இதன் உயர்ந்த மலையாகும். விக்டோரியா ஏரியின் ஒரு பகுதி உகாண்டாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.

வரலாறு
1800 களில் பண்டு மற்றும் நிலோட்டிக் மொழிகளை பேசும் மக்கள் விக்டோரியா ஏரியை எல்லையாக கொண்டு சிறு சிறு மண்டலங்களாக ஆண்டனர். 1840 வாக்கில் அரேபிய வணிகர்கள் இப்பகுதிக்கு வந்தனர். 1862 இல் ஐரோப்பியர்களும் 1870இல் கிருத்துவ மதப்போதகர்களும் தங்கள் மதங்களைப் பரப்ப வந்தனர். இதனால் குழப்பங்களும் சச்சரவுகளும் ஏற்பட்டன. 1894 முதல் உகாண்டா பிரித்தானியப் பேரரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. 1962இல் விடுதலைப் பெற்று சுதந்திர நாடானது. 1963இல் குடியரசானது. சர் எட்வர்டு முதிசா முதல் குடியரசு தலைவரானார். 1966 மில்டன் குடியரசுத் தலைவரானார். 1971இல் இடிஅமின் தலைமையில் இராணுவம் ஆட்சியைப் பிடித்தது. 1978இல் தான்சானியா படையெடுப்புக் காரணமாக இராணுவ ஆட்சி நீக்கப்பட்டு, மீண்டும் 1985இல் இராணுவம் ஆட்சியைப் பிடித்தது. 1986இல் இராணுவ ஆட்சி தூக்கி எரியப்பட்டது. 1986 முதல் யோவேரி முசெவேனி அதிபராகப் பதவி வகித்து வருகிறார். 1995இல் புதிய அரசமைப்புச் சட்டம் எழுதப்பட்டது.
Uganda Children
மக்கள் தொகை
2006 ஜூலை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை: 2,81,95,75 பேர். மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 3.37 சதவிகிதம் ஆகும். இங்குள்ள மக்களில் 33 சதவிகிதம் ரோமன் கத்தோலிக்க சமயத்தையும் 33 விழுக்காட்டினர் பிராட்டஸ்டண்ட் சமயத்தையும் 16 விழுக் காட்டினர் இசுலாம் சமயத்தையும் பின்பற்றி வருகின்றனர். ஆங்கிலம் அலுவலக மொழியாக உள்ளது. மக்களில் 69.9 சதவிகிதம் கல்வியறிவுப் பெற்றுள்ளனர்.

பொருளாதாரம்
இந்நாட்டு நாணயம் உகாண்டா ஷில்லிங் என அழைக்கப்படுகிறது. காப்பி, மீன் மற்றும் மீன் தயாரிப்புகள், தங்கம், பருத்தி, பூக்கள் மற்றும் தோட்டப் பயிர்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வாகனங்களும், மருத்துவப் பொருட்களும் பெருமளவு இறக்குமதி செய்யப்படுகின்றன.
Yoweri K Museveni
அரசு முறை
உகாண்டாவின் தலைநகர் கம்பாலா ஆகும். இந்நாடு இங்கிலாந்திடமிருந்து 1962 அக்டோபர் 9 அன்று சுதந்திரம் பெற்றது. இது ஒரு ஒற்றை பாராளுமன்ற குடியரசு ஆகும். குடியரசுத் தலைவரே நாட்டின் தலைவராவார். அவரே அரசாங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார்.

போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புகள்
இந்நாட்டில் மொத்த இரயில் பாதைகளின் நீளம் 1,241 கி.மீ. ஆகும். மற்றும் சாலைகளின் மொத்த நீளம் 70,746 கி.மீ. தொலைபேசி பயன்படுத்துபவர்கள் 90,400 பேர் (2006 கணக்கெடுப்பு) பயன்படுத்தப்படும் செல்போன்கள் 2 மில்லியனுக்கு மேல் எனக் கணக்கெடுப்பு கூறுகிறது.