மியான்மர் நாட்டில் ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, அந்த நாட்டின் நடைமுறைத்தலைவர் சூ கி சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அதிருப்தி சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ளது. அது அவருக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசை பறிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிற அளவுக்கு சென்றுவிட்டது.
இங்கிலாந்தில் உலக பிரசித்தி பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஆக்ஸ்போர்டு நகரம் அவருக்கு ‘பிரிடம் ஆப் ஆக்ஸ்போர்டு’ என்ற உன்னத கவுரவத்தை வழங்கி இருந்தது. மியான்மரில் ஜனநாயக உரிமைகளுக்காக அவர் நடத்திய போராட்டத்தை அங்கீகரித்து இந்த கவுரவத்தை ஆக்ஸ்போர்டு நகர கவுன்சில் அளித்தது.

ஆனால் இப்போது ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் விவகாரத்தில் அவர் மீது அதிருப்தி அடைந்து, ஆக்ஸ்போர்டு நகர கவுன்சில் அவருக்கு ஏற்கனவே வழங்கிய கவுரவத்தை பறித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இப்படி ஒரு நடவடிக்கையை ஆக்ஸ்போர்டு நகர கவுன்சில், இதுவரை மேற்கொண்டது இல்லை. இதுவே முதல் முறை என தகவல்கள் கூறுகின்றன.

ஆக்ஸ்போர்டு நகரத்துடன் சூ கி நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.