வடகொரியா நாட்டின் கிழக்கு கடற்கரையோர பகுதியில் வான்வெளியில் அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானங்கள் நேற்று முன்தினம் பறந்தன. முன்னறிவிப்பு எதுவுமின்றி வடகொரிய வான்வெளியில் அமெரிக்காவின் விமானங்கள் பறந்தது பற்றிய விழிப்புணர்வு எதுவும் வடகொரியாவுக்கு இல்லை.
இந்நிலையில், தேசிய உளவு பிரிவின் தகவல் அடிப்படையில் தென்கொரியா வெளியிட்டுள்ள தகவலில், அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் வடகொரிய வான்வெளியில் பறந்த நிலையில் அங்கு வடகொரியா, விமானங்களை பறக்க செய்தும் மற்றும் பாதுகாப்பினை அதிகரிக்கும் வகையிலும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன என தெரிவித்துள்ளது.

எனினும், தென்கொரிய உளவு அமைப்பினால் இந்த தகவலை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை.

வடகொரியாவின் வெளியுறவு துறை மந்திரி நேற்று கூறும்பொழுது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வடகொரியா மீது போர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதற்கு பதிலடி தரும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள எங்களுக்கு உரிமை உள்ளது.

எங்களது வான்வெளியில் பறக்கவில்லை என்றாலும் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்களை சுட்டு வீழ்த்தும் உரிமை எங்களுக்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.