தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் அங்குள்ள போலீசாரிடம் மனிதக்கறிகளை சாப்பிட்டு அலுத்து போய்விட்டதாக கவலையுடன் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அவரைத் தொடர்ந்து அவரது மற்ற 3 நண்பர்களும் சிக்கிக் கொண்டனர்.
மனித கறியை சாப்பிட்டதற்காக, நினோ பாத்தா (Nino Mbatha (32)), ஸ்தேம்பிசோ சிதொலே (Sthembiso Sithole (31)), லிண்டோகுலே மாசொன்டோ (Lindokuhle Masondo (32)) மற்றும் லிங்குசானி மகுபானே (Lungisani Magubane (30)) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மனித உடலின் பாகங்களான கை, கால் போன்றவைகளை அவர்கள் தங்கியிருந்த வீட்டினுள் கண்டறிந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் மீது கொலை மற்றும் கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட வீடு
இந்த நபர்கள் கைது செய்யபட்ட எயாகோட்ல்வெனி கிராமத்தில் 971 பேர் மட்டுமே மக்கள் தொகை. மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் கல்லறைகளை தோண்டி எடுத்து மனித மாமிசங்களை சாப்பிட்டுவருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு கிராம சமூக அரங்கில் கூடிய கிராம மக்கள் மனித சதை சுவையானது என ஒப்புக்கொண்டார்கள்.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், எஸ்ட்கோர்ட் (Estcourt) நகருக்கு அருகிலுள்ள பகுதிகளில் தங்களின் உறவினர்கள் யாரேனும் காணாமல் போயிருந்தால் தகவல் தெரிவிக்கும் படி போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்டுள்ள மனித உடல் பாகங்களை ஆய்வு செய்ய தடயவியல் குழு ஒன்று வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பாகங்கள் ஒரு மனித உடலைச் சேர்ந்ததா அல்லது பல மனித உடல்களைச் சேர்ந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.