சண்டிகரை சேர்ந்த ஹர்ஷத் சர்மா (வயது 16) இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். கிராபிக் டிசைனிங் படித்துள்ள இவர் உலகின் முண்ணனி இணையத் தொழிநுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்தில் வேலைக்காக பதிவு செய்து இருந்தார். இந்நிலையில் கூகுள் நிறுவனம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்றார். ஆன்லைன் மூலமாகவே நேர்முக தேர்விலும் வெற்றி பெற்றார்.
கூகுள் நிறுவனத்தில் தேர்வாகி உள்ள ஹர்ஷத் சர்மாவிற்கு ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த பயிற்சி தற்போது நிறைவடைந்துள்ளதால் மாதத்திற்கு 12 லட்சம் ரூபாய் சம்பளத்தில் கூகுள் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார். பயிற்சி அளித்து கொண்டிருக்கும் போது மாதம் 4 லட்சம் ரூபாய் உதவித்தொகை பெற்று வந்துள்ளார். ஹர்ஷத் சர்மா இந்த மாதத்திற்குள் கூகுள் நிறுவனத்தில் விரைவில் கிராபிக் டிசைனிங் பணியில் சேருவார் என்றும் நேற்று முந்தினம் செய்திகள் வெளியாகின.

இது விளையாட்டுக்காக மாணவன் செய்த குறும்புதான் என்றும், அது தெரியாமல் பள்ளி ஆசிரியர், பள்ளி நிர்வாகத்துக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் அளித்ததால் இந்த செய்தி ஊடகங்களில் பரவியது தெரிய வந்துள்ளது.

அந்த மாணவன் கூறியதை ஆசிரியர்கள் நம்புவதற்கு ஒரு காரணமும் இருந்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, செல்போன் அப்ளிகேஷன்களை எவ்வாறு பயன்படுத்துவது, பணமின்றி டெபிட், கிரெடிட் கார்டுகளைக் கொண்டு எவ்வாறு கட்டணம் செலுத்துவது போன்ற பல விஷயங்களை பள்ளி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களும் ஹர்ஷித் சர்மா கூறியுள்ளான். இதுவே அவன் சொன்ன பொய்யை நம்பக் காரணமாக அமைந்துவிட்டது.

இது குறித்து பள்ளி ஆசிரியர் கூறுகையில், 15 நாட்களுக்கு முன்பு, ஒரு பெட்டி நிறைய இனிப்புகளைக் கொண்டு வந்த ஹர்ஷித், தனக்கு கூகுளில் வேலை கிடைத்திருப்பதாகவும், விரைவில் தான் அமெரிக்கா செல்லவிருப்பதாகவும் கூறினான். இந்தப் பணிக்கு ஆன்லைனிலேயே விண்ணப்பித்ததாகவும் அவன் கூறினான். அவன் கணினியில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்ததால் அவன் சொன்னதை நாங்களும் நம்பினோம் என்றார்.

பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில், பள்ளி ஆசிரியர் இது பற்றி கூறியதும், உரிய ஆதாரங்களை மாணவனிடம் கேட்டோம். அவனும் கூகுள் அளித்தது போன்ற ஒரு சான்றிதழை அளித்தான். அது பற்றி விரிவான அறிக்கை தயார் செய்து மாவட்ட நிர்வாகத்துக்கு அளித்தோம். ஆனால், அந்த சான்றிதழ் பொய்யானது என்பது தெரிய வந்துள்ளது. இது பற்றி கேட்க மாணவனை தொடர்பு கொண்ட போது அவனது செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டுள்ளது என்றார்.