சென்னையில், வாடகைக்கு குடியிருப்பவர்களின் பெயர் விவரங்களை அருகிலுள்ள போலீஸ் நிலையங்களில் அடுத்த 15 நாட்களுக்குள் பதிவு செய்யவேண்டும் என்று வீட்டு உரிமையாளர்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக நேற்று இரவு சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பாக ஒரு அறிக்கை செய்திக்குறிப்பாக வெளியிடப்பட்டது, அதன் விவரம் வருமாறு:– சென்னை நகரில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும், குற்றங்களை குறைப்பதற்காகவும், போலீஸ் தரப்பில் பல்வேறு முயற்சிகளும், நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், சென்னை நகரில் வீடுகளை வாடகைக்கும் மற்றும் குத்தகைக்கும் விட்டுள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கப்படுகிறது.

வாடகைதாரர்கள் மற்றும் குத்தகைதாரர்களின் பெயர் விவரங்களை அருகிலுள்ள போலீஸ் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும். இதற்காக போலீஸ் நிலையங்களில் விண்ணப்ப மனுக்கள் உள்ளன. அந்த விண்ணப்ப மனுக்களை பெற்று அதில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்திசெய்து போலீஸ் நிலையங்களில் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இந்த தகவல் வெளியான அடுத்த 15 நாட்களுக்குள் குறிப்பிட்ட விண்ணப்ப மனுக்களை சமர்ப்பிக்க வேண்டுகிறோம்.

சமீபத்தில் சென்னை நகரில் நடந்த சில குற்றசம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் வாடகைக்கு குடியிருப்பவர்கள் என்று கண்டறியப்பட்டது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் பெயர் விவரங்களைக்கூட வாடகைக்கு விட்ட வீட்டு உரிமையாளர்கள் சேகரித்து வைக்கவில்லை.

அதனால்தான் வாடகைக்கு குடியிருப்பவர்களின் பெயர் விவரங்களை போலீஸ் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். பெயர் விவரங்களை பதிவு செய்வதற்கு போலீஸ் நிலையங்களில் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. சென்னை நகர போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு வீட்டு உரிமையாளர்களும், வாடகைக்கு குடியிருப்பவர்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.