தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் 30–ம் தேதி வட கிழக்கு பருவமழை பெய்யத்தொடங்கியது. ஆனால் அந்த மழை லேசாகத்தான் பெய்தது. அந்த மழையும் 2 அல்லது 3 நாட்கள்தான் நீடித்தது. அதன் பிறகு தமிழகத்தில் மழை பெய்யவில்லை. மாறாக ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்தது. மழை இல்லாத காரணத்தால் இரவில் பனிபெய்யத்தொடங்கி உள்ளது. அதன் காரணமாக இரவில் குளிர் அடிக்கிறது.

மழை பெய்ய வேண்டிய நேரத்தில் இப்படி பனி பெய்கிறதே என்று விவசாயிகளும், பொதுமக்களும் கவலைப்படுகிறார்கள். எனவே இவர்களுக்கு சற்று ஆறுதல் தரும் செய்தியாக நாளை முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:–
தென் கிழக்கு வங்கக்கடலில் அந்தமானுக்கு தெற்கு பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவானது. அது மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்யும். அந்த மழை தொடர்ந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
நேற்று காலை 8–30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறையில் 2 செ.மீ. மழை பெய்துள்ளது.
0 Comments