நகைச்சுவை நடிகர் விவேக் தனது மகளுடன் அதிகாலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் ஸ்டேடியத்துக்கு சென்று இருந்தார். அங்கு காரின் பின்னால் உள்ள ‘டிக்கி’யின் மேல் விலைஉயர்ந்த செல்போனை வைத்து விட்டு உடற்பயிற்சியில் ஈடுபட்டார். மகள் டென்னிஸ் பயிற்சி முடித்து வந்ததும் செல்போனை மறந்து அவசரமாக காரில் ஏறி புறப்பட்டார். செல்போன் கார் வேகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகில் சென்ற போது கீழே விழுந்தது.
அந்த பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டிக்கொண்டு இருந்த பாஸ்கர் என்ற ஏழை இளைஞர் செல்போனை எடுத்து விவேக்கிடம் ஒப்படைக்க காரின் பின்னால் ஓடி ஜன்னலை தட்டினார். ஆனால் கார் நிற்காமல் சென்று விட்டது.

வீட்டிற்கு சென்ற பிறகு செல்போனை காரின் பின்னால் வைத்து மறந்து விட்டது தெரிந்து அதிர்ச்சியானார். செல்போனும் வைத்த இடத்தில் இல்லை. உடனடியாக அந்த செல்போன் நம்பருக்கு விவேக் போன் செய்தார். சுவரொட்டி ஒட்டிக்கொண்டு இருந்த பாஸ்கர் அதில் பேசி போன் கீழே விழுந்ததையும் அதை எடுத்து கொடுக்க கார் கதவை தட்டியும் விவேக் நிற்காமல் சென்றதையும் தெரிவித்தார். அம்பேத்கர் சிலை அருகில் நிற்பதாகவும் வந்து செல்போனை வாங்கிக்கொள்ளும்படியும் கூறினார்.

விவேக் உடனடியாக அந்த இடத்துக்கு சென்று அவரிடம் இருந்த தனது செல்போனை வாங்கினார். அந்த இளைஞருக்கு உதவ நினைத்து தன்னிடம் இருந்த பணத்தை எடுத்து கொடுத்தார்.

ஆனால் பணத்தை வாங்க அந்த இளைஞர் மறுத்து விட்டார். அவருடைய செயல் விவேக்கை நெகிழ்ச்சி அடையச் செய்தது. அவருடன் நின்று ‘செல்பி’ எடுத்துக்கொண்டு சமூகத்தில் இப்படியும் நல்ல இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று பாராட்டி விட்டுச்சென்றார்.