பிறந்தது முதல் உலகத்தைக் காண முடியாமல், 6 ஆண்டுகளுக்குப் பிறகு உலகை முதன் முறையாகக் காணும் வாய்ப்பைப் பெற்ற உகாண்டா சிறுவன்
கிறிசென்ட் என்ற சிறுவன் கண்புரையுடன் பிறந்தான். அவனால், வெளிச்சம் அல்லது இருட்டு ஆகியவற்றை மட்டுமே தெளிவற்ற நிலையில் உணர முடிந்தது. உகாண்டாவில், கிறிசென்ட் தனது பாட்டியுடன் மண் வீட்டில் வாழ்ந்து வந்தான். சுற்றிலும் கொக்கொ தோட்டப் பயிர்கள். அதாவது, சகஜ வாழ்க்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சூழல். அவனால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. சக வயது சிறுவர்களுடன் விளையாட முடியவில்லை. அடிப்படைத் தேவைகளுக்குக் கூட தனது குடும்பத்தையே நம்பியிருக்கும் நிலை. சைட்சேவர்ஸ் என்ற சர்வதேச அறக்கட்டளை உதவியுடன் உகாண்டா மருத்துவக் குழு விடுத்த அழைப்பை ஏற்று, குடும்பத்தினர் சிறுவனை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். 
அதன் தொடர்ச்சியாக, நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள பாலே பகுதியில் கிறிசென்டுக்கு இரட்டை அறுவை சிகிச்சை நடைபெற்றது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு, கண் சிகிச்சை நிபுணர் நெல்சன் ச்வா, கிறிசென்டின் கண்களைப் பரிசோதித்து, கண்ணாடிகளை வழங்கினார். அதன் மூலம், இந்த உலகை அவன் முதல் முறையாகப் பார்த்துப் பரவசமடைந்தான். உகாண்டாவில் 368,000 பேர் பார்வையற்றவர்களாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

புதிய கண் கண்ணாடிகளுடன் கண் மருத்துவமனையிலிருந்து உற்சாகமாக வெளியே வருகிறான் கிறிசென்ட். ``அறுவை சிகிச்சைக்கு முன்பு, எந்த ஒரு தேவைக்கும் தனது பாட்டி அல்லது குடும்ப உறுப்பினர் யாரையாவது நம்பியிருந்தான் கிறிசென்ட். ஆனால் இப்போது, நம்பிக்கை கொண்ட, சுதந்திரமான சிறுவனாக இருக்கிறான்'' என்றார் ஜோசப் மக்யேஸி என்ற மருத்துவமனை அதிகாரி ஒருவர். தனது சொந்த கிராமமான புன்டிபுக்யோவுக்கு திரும்பச் செல்லும் வழியில், கார் கண்ணாடிகள் வழியாக ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
கிறிசென்ட் வீட்டுக்கு வந்ததும், அவனது உறவினர்கள் அவனைத் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சினார்கள். ஜன்னல் வழியாக வெளியில் காட்டினார்கள். தற்போது, ஒவ்வொரு நாளும் அடிப்படையாக என்ன செய்ய வேண்டும் என்பதை அவனுக்குக் கற்றுத்தரும் பணியில் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளார்கள். ``அவனது சகோதர, சகோதரிகள் மிகுந்த உற்சாகமடைந்திருக்கிறார்கள். தங்கள் சகோதரனால் இனி பார்க்க முடியும் என ஆனந்தமடைந்திருக்கிறார்கள்'' என்று கூறினார் அவனது பாட்டி.