உகாண்டாவில் உள்ள கட்வே கபடோரா நகரில் (Katwe-Kabatoro town) கடந்த டிசம்பர் 12-ம் தேதி இகாபால் (Iga Paul) என்ற 2 வயது சிறுவன், ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்தான். இந்த ஏரி உகாண்டாவின் புகழ்பெற்ற விலங்கியல் பூங்காவான (Queen Elizabeth National Park) குயின் எலிசபெத் நேஷனல் பார்க் பகுதியில் உள்ளது. இந்த பூங்காவில் சிங்கம், யானை, ஹைனா உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமாக உள்ளன.
சிறுவன் இகாபால் வீட்டிலிருந்து அரை மையில் தொலைவில் (Lake Edward) எட்வர்ட் ஏரி உள்ளது. இந்த ஏரியில் ஆயிரக்கணக்கான நீர்யானைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
சிறுவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில், யாரும் எதிர்பாராத விதத்தில், ஏரியில் இருந்து நீர்யானை ஒன்று அந்த சிறுவனை கவ்வி பிடித்துள்ளது. தனது பெரிய தாடைகளால் சிறுவனை விழுங்க முயற்சித்துள்ளது. இதனை ஏரிக்கரையில் இருந்த கிரிஸ்பாஸ் அகோன்சா (Chrispas Bagonza) என்பவர் பார்த்துள்ளார்.
அவர், உடனடியாக சிறுவனை காப்பாற்ற கையில் கிடைத்த கற்களை எடுத்து நீர்யானை மீது வீசியுள்ளார். இதனால் பாதி விழுங்கிய நீர்யானை, சிறுவனை விழுங்கும் முயற்சியை கைவிட்டு அவனை கரையில் துப்பிவிட்டு ஏரிக்குள் சென்றுவிட்டது.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுத்தாக தெரிவிக்கப்பட்டது.
சிறுவனுக்கு கையில் மட்டும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டு தற்போது அவன் உடல்நிலை தேறி வருவதாகவும் உகாண்டா போலீசார் கூறியுள்ளனர்.
0 Comments