மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பெனி நகரில் மதுபான விடுதி ஒன்றில் நேற்று முன்தினம் இரவு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்று கொண்டிருந்தது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு ஆடல், பாடல் என மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். 

அப்போது உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு வந்திருந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் மதுபான விடுதிக்குள் நுழைய முயன்றார். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை நுழைவாயிலேயே தடுத்து நிறுத்தினார்.

இதையடுத்து அந்த தற்கொலைப்படை பயங்கரவாதி வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது.

இதில் தற்கொலைப்படை பயங்கரவாதி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். மேலும் இந்த குண்டு வெடிப்பில் 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் பலியாகினர். 13 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.