மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த பயங்கரவாத குழுக்கள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ராணுவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே அவ்வபோது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் மொப்தி மாகாணம் சொவிரி நகரில் இருந்து பென்டிய்ஹரா நகருக்கு நேற்று பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். சாங்கோ ஹெரி என்ற பகுதியில் சென்றபோது அந்த பஸ்சை இடைமறித்த பயங்கரவாதிகள் பஸ்சின் டிரைவரை கொலை செய்தனர்.
இதனால், அதிர்சியடைந்த பயணிகள் பஸ்சில் இருந்து தப்பியோட முயற்சித்தனர். ஆனால், பயங்கரவாதிகள் பஸ்சின் கதவுகளை மூடி அதற்கு தீ வைத்தனர். இந்த கோர தாக்குதலில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் 33 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு வருவதற்குள் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments