பேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக செயலிகளுக்கு உகாண்டாவில் அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவில், கடந்த 1986 -ம் ஆண்டு முதல் யோவெரி முசெவெனி (76) அதிபராக உள்ளார். அங்கு நாளை அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிபர் முசெவெனிக்கு, எதிர்கட்சித் தலைவரான பாபி வைன் கடும் போட்டியை உருவாகியுள்ளார். 

38 வயதாகும் பாபி வைன் பிரபல பாப் பாடகராக இருந்து அரசியல்வாதியானவர். அந்நாட்டிலுள்ள மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் இளைஞர்கள். சராசரியாக 30 வயதுக்குள்ளான ஒரு ஒரு பெரும் இளைஞர் கூட்டம் 'புதிய உகாண்டா' என்ற முழக்கத்துடன் பாபியை பின் தொடர்ந்து வருகின்றனர். 

அந்நாட்டில் ரேடியோ, பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் அரசு ஆதரவாளர்களுக்கு சொந்தமானவை. இதனால், எதிர்க்கட்சித் தலைவர் பாபி வைன் பிரசாரத்தை முக்கிய மீடியாக்கள் யாரும் ஒளிபரப்புவதில்லை. 

இதனால், அவர் தனது பிரசாரத்தை பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பி வந்தார். இதனை தடுக்கும் வகையில் அந்நாட்டு அரசு பேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக செயலிகளுக்கு தடை விதித்துள்ளது.