ஊரடங்கு காலத்தில் ஆப்பிரிக்க நாடான மலாவியில் 10,000 சிறுமிகள் வரை கருவுற்றிருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாகக் கடந்த மார்ச் 20 முதல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாகப் பள்ளி மாணவர்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் சூழல் உருவானது. பெரும்பாலும் வறுமையில் வாடும் குடும்பங்களைக் கொண்ட மலாவியில் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் குழந்தை திருமணங்கள் இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான குழந்தை திருமணங்கள் காரணமாக அந்நாட்டில் தற்போது கருவுற்றிருக்கும் சிறுமிகளின் எண்ணிக்கை, அதிகளவில் உயந்துள்ளது.

குறிப்பாக தெற்கு பாலோம்பே மாவட்டத்தில் 5,000 பதின்பருவ பெண்கள், சிறுமிகள் இந்த ஊரடங்கு காலத்தில் கருவுற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, என்சான்ஜே பகுதியில் 300 சிறுமிகளும், மங்கோச்சியின் கிழக்கு மாவட்டத்தில், 7,274 பெரும் கருவுற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பல மாணவிகள் வயது 10இல் இருந்து 14 வயதுக்குள் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மலாவியில் நிலவும் ஏழ்மையும், பெண் குழந்தைகள் மீதான அடக்குமுறைகளும் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரிக்கக் காரணமாகியுள்ளன என்று கருத்துகள் எழுந்து வருகின்றன. இதேபோல மற்றொரு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் ஊரடங்கு காலத்தில் 1,52,000 சிறுமிகள் கருவுற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.