ஆப்பிரிக்காவில் கொரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப் பட்டவா்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும், அந்தப் பிராந்தியத்தில் கொரோனா நோய் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையும் 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
ஏழ்மை நிறைந்த, மிக மோசமான சுகாதாரக் கட்டமைப்பைக் கொண்ட அந்தப் பிராந்தியத்தில் கொரோனா நோய்தொற்று தீவிரம் காட்டினால், விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்று நிபுணா்கள் எச்சரித்து வரும் நிலையில், பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கை இந்த அளவு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:- பொருளாதாரச் சரிவை தடுத்து நிறுத்துவதற்காக, ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளில் பொது முடக்கங்கள் தளா்த்தப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் ஆப்பிரிக்க நாடுகளின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிககை 4 லட்சத்தைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கையும் 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

புதன்கிழமை நிலவரப்படி அந்த நாடுகளில் 4,08,736 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த நோய்க்கு 10,204 போ பலியாகியுள்ளனா்.

ஆப்பிரிக்க நாடுகளிலேயே தென் ஆப்பிரிக்காவில்தான் மிக அதிகம் பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அந்த நாட்டில் இதுவரை 1,51,209 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. 2,657 போ அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா்.

இதுதவிர, எகிப்து, நைஜீரியா, அல்ஜீரியா, கானா, மொராக்கோ, கேமரூன், சூடான் உள்ளிட்ட நாடுகள் கொரோனா நோய்த்தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.