உகாண்டாவின் அருவா (Arua) மறைமாவட்டத்தில் வாழ்கின்ற பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தோருக்கு ஆன்மீக உதவி தேவைப்படுகிறது
உகாண்டா நாட்டில் வாழ்கின்ற, தென் சூடான் மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு நாடுகளைச் சார்ந்த பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட புலம்பெயர்வோருக்கு ஆன்மீக உதவி தேவைப்படுகின்றது என்று, உகாண்டா ஆயர் சபினோ ஓகன் ஓடோகி (Sabino Ocan Odoki) கூறியுள்ளார்.

உகாண்டாவின் அருவா (Arua) மறைமாவட்ட ஆயர் Sabino Ocan Odoki அவர்கள், வாடிகள் (Vatican) செய்திகளுக்கு அளித்த பேட்டியில், தனது மறைமாவட்டத்தில் அடைக்கலம் தேடியுள்ள இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோரில் பெரும்பாலானவர்கள், தென் சூடானைச் சேர்ந்தவர்கள் என்று கூறினார்.

2013ம் ஆண்டில் தென் சூடானில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தவுடன் முதல்கட்டமாக, புலம்பெயர்ந்தோர் தனது மறைமாவட்டத்திற்கு வந்தனர் என்றும், இம்மக்களுக்கு, உள்ளூர் காரித்தாஸ், பெல்ஜியம் காரித்தாஸ், நார்வே காரித்தாஸ் உட்பட, கத்தோலிக்க பிறரன்பு நிறுவனங்கள் உதவி வருகின்றன என்றும், ஆயர் Odoki அவர்கள் கூறினார்.

இந்த மக்களின் ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்ற, துறவு சபைகள், தங்கள் அருள்பணியாளர்களையும், அருள்சகோதரிகளையும் அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார், உகாண்டா ஆயர் ஓடோகி.