நகுருவின் நீர் மற்றும் சுகாதார சேவைகள் நிறுவனம் மனிதக் கழிவுகளை சேகரித்து எரிபொருளாக மாற்றப்பட்ட உருண்டைகளாக விற்பனை செய்கிறது. அதன் ஊழியர்கள் இப்பணியை செய்கின்றனர். இவ்வாறு செய்யும்போது தீமை விளைவிக்கும் நுண்ணுயிரிகளை நீக்கம் செய்கின்றனர். அத்துடன் நாற்றத்தையும் இணைத்தே நீக்குகின்றனர்.
நகுருவில் வசிப்போரில் நான்கில் ஒரு குடும்பம் மட்டுமே கழிவு நீர் செல்லும் சாக்கடை அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. மீதமிருப்போரின் கழிவுகள் நீர் நிலைகளிலும், குறைந்த வருமானப் பிரிவு மக்கள் வசிக்கும் இடங்களிலும் புதைக்கப்படுகிறது.

ஆனால் கழிவுகளை பயன்படுத்தி அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் உருண்டைகளாக மாற்றி வீடுகளுக்கு எரிபொருளாக வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. முதலில் இதைப் பயன்படுத்த மறுத்த மக்கள் இப்போது அவற்றை விரும்பி பயன்படுத்துகின்றனர். “அதில் நாற்றமில்லை; சமையலுக்கு நன்கு உதவுகிறது, நன்றாக எரிகிறது. விரைவாக சமைக்க முடிகிறது மேலும் இந்த உருண்டைகள் நீண்ட நேரம் எரிகின்றன என்று பாராட்டுரை வாசிக்கிறார் ஒரு குடும்பத்தலைவி.
ஏழை மக்களின் சுகாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் மேம்படுத்தும் நோக்கோடு செயல்படும் இத்திட்டத்திற்கு ஐரோப்பிய நாடுகள் பல உதவி செய்கின்றன.