உலகம் முழுவதில் தினமும் 100 கோடி பேர் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவதாக அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது. உடனடியாக மெசேஜ்கள் அனுப்பவும், வாய்ஸ் கால், வீடியோ கால் செய்ய வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க புது புது வசதிகளை அறிமுகம் செய்து அப்டேட் செய்து வருகிறது வாட்ஸ்ஆப் நிறுவனம்.
இந்நிலையில் வாட்ஸ்ஆப்பிற்கு போட்டியாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கைசாலா (Kaizala) என்ற மெசேஜ் அனுப்பும் ஆப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. பல மாநில அரசுகளும், தொழில் நிறுவனங்களும் ஏற்கனவே இந்த ஆப்சை பயன்படுத்தி வருகின்றன. சோதனை அடிப்படையில் மாநில அரசுகளால் பயன்படுத்தப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த ஆப்ஸ் தற்போது ஆன்டிராய்ட் மற்றும் ஐஓஎஸ் மொபைல்களில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கைசாலா ஆப்பில் கொண்டு வரப்பட்டுள்ள சில வசதிகள் வாட்ஸ்ஆப்பிற்கு பெரும் சவாலாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. வாட்ஸ்ஆப் குரூப்பில் அதிகபட்சமாக 256 நபர்களை மட்டுமே சேர்க்க முடியும். ஆனால் கைசாலா ஆப்சில் எத்தனை பேரை வேண்டுமானாலும் குரூப்பில் சேர்த்துக் கொள்ள முடியும். மேலும் கைசாலா ஆப்ஸ் மூலம் கருத்து கணிப்பு, ஆய்வுகள், டாக்குமென்ட்களை உருவாக்க முடியும். இதன் மூலம் தொழில் நிறுவனங்கள் தங்கள் குரூப்பில் சர்வே நடத்தி, தங்களுக்கு இருக்கும் வரவேற்பை தெரிந்து கொள்ளலாம்.

கைசாலா ஆப்ஸ் மூலம் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான நபர்களுக்கு மெசேஜ் அனுப்பவும், அவர்களுக்கு வாய்ஸ் கால் செய்த பேசவும் முடியும். கைசாலா ஆப்ஸ் வைத்திருப்போர் வணிக வளாகம் ஒன்றிற்குள் நடந்து சென்றால், தானாகவே அந்த வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் கிடைக்கும் பொருட்கள், அவற்றின் சிறப்பு தள்ளுபடிகள் உள்ளிட்ட விபரங்களை பெற முடியும்.