அமீரகத்தில் வசிப்பவர்கள், கத்தார் நாட்டுக்கு ஆதரவாக செயல்பட்டால் 15 ஆண்டு ஜெயில் தண்டனையுடன், 5 லட்சம் திர்ஹாம் (ரூ.87½ லட்சம்) அபராதமும் விதிக்கப்படும் என்று அமீரக மத்திய பொது நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இது குறித்து அமீரக சட்ட ஆலோசகர் மற்றும் அட்டார்னி ஜெனரல் ஹமத் சைப் அல் ஷாம்சி நேற்று அபுதாபியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கத்தார் நாடு பயங்கரவாதத்திற்கு துணை போகிறது. வளைகுடா நாடுகளுக்கு இடையே கையெழுத்தான பயங்கரவாதத்திற்கு எதிரான ஒப்பந்தத்தை அது மீறி விட்டது. இந்த குற்றச்சாட்டுகளுக்காக அமீரகம், சவுதி அரேபியா உள்ளிட்ட 8 நாடுகள் கத்தாருடன் தங்களது தூதரக உறவை துண்டிப்பதாக அறிவித்துள்ளன.

இதனைத்தொடர்ந்து அந்த நாடுகளில் உள்ள தூதரக அதிகாரிகள் மற்றும் கத்தார் குடிமக்கள் அனைவரும் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் குறிப்பாக போக்குவரத்துக்கான தரை, வான் மற்றும் கடல் என அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு விட்டன.

அமீரக மத்திய சட்டம் மற்றும் மத்திய தண்டனை சட்டத்தின்படி அமீரகத்தில் வசிக்கும் குடியுரிமை பெற்ற அல்லது வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர் தேசிய ஒற்றுமையை குலைக்கும் வகையில் அல்லது நாட்டின் அமைதியை கெடுக்கும் வகையில் தகவல்களை வெளியிடுவது அல்லது தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பரப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதற்கு அதிகபட்சமாக 15 ஆண்டு ஜெயில் தண்டனையும், குறைந்தது 5 லட்சம் திர்ஹாம் (ரூ.87½ லட்சம்) அபராதமும் விதிக்கப்படும் என்று அமீரக மத்திய பொது நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த சட்டம் தற்போது கத்தார் நாட்டுடனான தூதரக உறவு துண்டிப்பு விவகாரத்துக்கும் பொருந்தும்.

நிபந்தனைகள்

அமீரகத்தில் வசிப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகள் வருமாறு:-

* வெளிநாட்டவர் அல்லது குடியுரிமை பெற்ற யாரும் கத்தார் நாட்டின் மீது இரக்கம் காட்டக்கூடாது.

* பேஸ் புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் -அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களுக்கும் இது பொருந்தும்.

* சமூக வலை தளங்கள் மூலம் கத்தார் நாடு பற்றியோ அல்லது அந்த நாடு செய்துள்ளதை நியாயப்படுத்தும் வகையிலோ கருத்துக்களை பதிவிடுவது, கத்தார் நாடு குறித்து இரக்கமான தகவல்களை கூறுவது, குறிப்பாக அந்த நாட்டிற்கு ஆதரவான எந்த ஆவணங்களையும் பகிர்ந்து கொள்ள கூடாது.

* கத்தார் நாட்டுக்கு ஆதரவாக நோட்டீசுகள் அச்சிட்டு வெளியிடுவது, இ.மெயில் மூலம் தகவல் அனுப்புவது, வீடியோ காட்சிகளை பகிர்ந்து கொள்வது, ஒளிபரப்புவது அல்லது கத்தார் நாட்டின் மீது இரக்கப்பட்டோ, ஆதரவாகவோ பொது இடங்களில் பேசுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

* இவை அனைத்தும் தேச விரோத செயல்களாக கருதப்பட்டு உடனடியாக தண்டனை வழங்கப்படும்.

எனவே கத்தார் நாடு செய்துள்ள விரோதமான போக்கு மற்றும் பொறுப்பற்ற கொள்கைகளுக்காகவே இந்த உறவு துண்டிப்பு நிகழ்ந்துள்ளது. இதனை உணர்ந்து அனைத்து அமீரக வாழ் மக்களும், கத்தாருக்கு ஆதரவான தகவல்களுக்கு துணை செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.