கத்தார் நாடு பயங்கரவாதத்திற்கு துணை போகிறது. வளைகுடா நாடுகளுக்கு இடையே கையெழுத்தான பயங்கரவாதத்திற்கு எதிரான ஒப்பந்தத்தை அது மீறி விட்டது. இந்த குற்றச்சாட்டுகளுக்காக அமீரகம், சவுதி அரேபியா உள்ளிட்ட 6 நாடுகள் கத்தாருடன் தங்களது தூதரக உறவை துண்டிப்பதாக அறிவித்துள்ளன. இதனைத்தொடர்ந்து அந்த நாடுகளில் உள்ள தூதரக அதிகாரிகள் மற்றும் கத்தார் குடிமக்கள் அனைவரும் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதில் குறிப்பாக போக்குவரத்துக்கான தரை, வான் மற்றும் கடல் என அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு விட்டன.

எகிப்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் முஸ்லிம் சகோதரத்துவம், ஹமாஸ் ஆகிய அமைப்புகளுக்கும், கிழக்கு சவூதியில் ஈரானின் உதவியுடன் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் குழுக்களுக்கும் கத்தார் உதவி செய்கிறது எனவும் குற்றச்சாட்டாக உள்ளது.

பிரச்சனை இப்போதுதான் தொடங்கியதாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக கடந்த மே மாத இறுதியிலேயே பிரச்னை ஆரம்பித்துவிட்டது. கத்தார் அரசின் செய்தி நிறுவனமான கியூ.என்.ஏ.வின் இணையதளத்தில் ஒரு செய்தி வெளியானது. கத்தார் மன்னரான ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி, ஈரான் ஒரு இஸ்லாமிய சக்தி என்று புகழ்ந்ததாகவும், ஈரான் மீதான அமெரிக்க அதிபர் டிரம்பின் கொள்கையை விமர்சித்துப் பேசியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதான் பிரச்னையின் தொடக்கப்புள்ளியாகும்.

இதனையடுத்து இந்த குற்றச்சாட்டுகளை கத்தார் மறுத்தது. செய்தி நிறுவனத்தின் இணையதளத்தை முடக்கி, பொய்யான செய்தியை சிலர் அதில் இடம்பெற செய்ததாக விளக்கம் அளித்தது. சிரியா மற்றும் ஈராக்கில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு கத்தார் உதவி செய்கிறது. இந்நிலையில் பயங்கரவாதத்திற்கு நிதி உதவிசெய்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளது.

இதனை கத்தார் முற்றிலுமாக மறுத்துவிட்டது. அரபு நாடுகள் உறவுகளை துண்டித்த நிலையில் கியூ.என்.ஏ. இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டது தொடர்பாக கத்தார் ஆரம்பக்கட்ட அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

கத்தார் உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், கத்தார் செய்தி நிறுவனம் ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஹேக்கிங் செய்யப்பட்டது. செய்தி நிறுவன இணையதளம் உயர் தொழிநுட்ப உத்திகள் மற்றும் புதிய முறையில் ஹேக்கிங் செய்யப்பட்டு உள்ளது. மே மாதம் 24-ம் தேதி கத்தார் மன்னர் பேசியதாக போலியான ஒரு செய்தியானது வெளியிடப்பட்டு உள்ளது என கத்தார் உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. கத்தார் செய்தி நிறுவனம் மீது இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பதை கத்தார் உள்துறை அமைச்சகம் குறிப்பிடவில்லை.

செய்தி நிறுவன இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டது தொடர்பாக தன்னுடைய விசாரணைக்கு உதவி செய்த எப்பிஐ மற்றும் பிரிட்டன் உளவுத்துறைக்கு கத்தார் உள்துறை நன்றியை தெரிவித்து உள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் தொடர்பாக கத்தார் மன்னர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக சவுதி மற்றும் எமிரெட்ஸ் மீடியாக்களால் செய்தி வெளியிட்டது, இதே அரபு நாடுகளின் திங்கள் கிழமை நடவடிக்கைக்கு காரணமானது.