அமெரிக்கா கண்டறியப்பட்ட பின்னர், அதன் நிர்மாண பணிகளுக்கென பெருமளவு அடிமைகள் ஆப்பிரிக்காவில் இருந்தே கொண்டு செல்லப்பட்டனர். ஒன்றும் அறியாத இந்த அப்பாவி ஆப்பிரிக்க மக்கள் ,ஆயுதங்களின் அச்சுறுத்தலுக்காக ஐரோப்பிய வணிகர்களின் சொல்படி அடிமைகள் ஆகினர். மேற்கு ஆப்பிரிக்க கரை நாடுகளான, செனெகல், கானா போன்ற நாடுகளில் இருந்து அடிமைகளாக்கப்பட்ட மக்களை, புதிதாக கண்டு பிடித்த அமெரிக்க கண்டத்திற்கு ஏற்றுமதி செய்யும் வாணிபம் ஆரம்பமாகியது.

ஆரம்பத்தில் ஸ்பானிய, போர்த்துகீசிய வியாபாரிகளின் தனித்த உரிமையாய் இருந்த இந்த வர்த்தகத்தில், விரைவில் ஹாலந்த், ஆங்கிலேய வியாபாரிகளும் ஈடுபட்டனர். இதனால் இங்கு கொலைகளும், தாக்குதல்களும் அதிகமாகின. ஆப்பிரிக்க மக்கள், விலங்குகளை விடவும் கீழாக நடத்தப்பட்டனர்.
அப்படி 17 மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் பெருமளவு வந்த ஆப்பரிக்க மக்கள் தான், பின்னர் நவீன அமெரிக்காவை வடிவமைக்க, தங்களது பெருமளவு உழைப்பை அளித்தனர். பிரிட்டன் பேரரசு 1795-ம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனைப் பகுதியைக் கைப்பற்றியது, முக்கியமாக புரட்சிகர பிரெஞ்சு குடியரசு கட்டுப்பாட்டில், இந்த பகுதி விழுவதைத் தடுப்பதற்காக, இங்கிலாந்து இந்த பகுதியை அவசர அவசரமாக கைப்பற்றியது.

எனினும் அவர்களுக்கு இந்த பகுதியின் மீது எந்த ஈர்ப்பும் இருக்கவில்லை என்பதே நிஜம். ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிலான அதனுடைய நிலைகளைப் பாதுகாத்துக்கொள்ள, பிரிட்டன் பேரரசு தனது வணிகர்களின் நீண்ட கடல்பயணத்திற்கான இடைப்பட்ட ஓய்வு துறைமுகமாக கேப் டவுனை பயன்படுத்திக்கொள்ள விரும்பியது.
1803-ம் ஆண்டில் டச்சுக்காரர்களுக்கு கேப் டவுனை பிரிட்டன் பேரரசு உடன்படிக்கை ஒன்றின் பேரில் திரும்ப வழங்கியது, ஆனால் வியாபார நஷ்டங்களின் காரணமாக டச்சுக் கிழக்கிந்திய கம்பெனி திவாலானது. இதனால் 1806-ம் ஆண்டில் பிரிட்டன் பேரரசு, கேப் காலனியை மீண்டும் இணைத்துக்கொண்டது. இதிலிருந்து தான் ஆப்பரிக்காவின் நவீன காலம் தொடங்குகிறது.
இன்று 54 நாடுகளாக இருக்கும் ஆப்பிரிக்க பகுதிகள் முழுக்கவே, ஆங்கிலேயரின் வருகைக்கு பிறகு, ஐரோப்பிய நாட்டவரின் குடியேற்ற பகுதியாகி, சூரையாடபப்ட்டது. அடிமை வணிகமும், அப்பிரிக்காவின் செல்வங்களை கொள்ளையிட்டதாலும், ஐரோப்பிய நாடுகளின் வசதி பெருகியது என்றால் அது மிகையில்லை. ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் வாழ்ந்த பழங்குடி மக்களை கொன்று அழித்து விட்டு, அந்த பகுதிகளை ஆங்கிலேயர் சொந்தம் கொண்டாட தொடங்கினர்.

முதலாம், இரண்டாம் போயர் போர்கள் போன்றவை, ஆப்பிரிக்க பழங்குடி மக்களை கொன்று குவித்த கதையை சொல்பவையாக இருந்தன.
தென்னாப்பிரிக்காவில் 1867–ம் ஆண்டில் பெருமளவு வைரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும், 1884–ம் ஆண்டில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதும், ஐரோப்பியர்களின் வருகையையும், இடப்பெயர்வையும் அதிகப்படுத்தியது.
இது பூர்வகுடி மக்களின் ஐரோப்பிய தென்னாப்பிரிக்க கொத்தடிமைத்தனத்தை தீவிரப்படுத்தியது. இந்த முக்கியமான பொருளாதார மூலாதாரங்களை காப்பாற்றவும், கட்டுப்படுத்துவதற்குமான போராட்டம், ஐரோப்பியர்களுக்கும் பூர்வகுடி மக்களுக்கும் தொடர்ந்து நடைபெற்றது. இது, போயர்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் இடையில் பெரும் போராக அமைந்தது.
காட்டு வளங்கள், அரியவகை விலங்கினங்கள், என யாவுமே ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. நிரந்தர குடியிருப்பை ஆப்பிரிக்காவில் உண்டாக்க வேண்டும் என்ற ஐரோப்பிய அரசுகளின் சிந்தனை தொடங்கியவுடன், அடிமை வாணிகம் தடை செய்யப்பட்டது. அதற்கு பதிலாக, உள்ளூர் ஆப்பிரிக்க மக்கள், ஆப்பிரிக்காவில் இருந்த ஐரோப்பிய வெள்ளையர்களுக்கு பணியாளர்களாக மாற்றப்பட்டனர்.

கென்யா, தான்சானியா, உகாண்டா, நைஜீரியா, காம்பியா, கானா, எகிப்து, லிபியா, சூடான், கமரூன், தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, ஜாம்பியா, நமீபியா போன்ற நாடுகள் பிரிட்டிஷ் ஆளுமையின் கீழும், ப்ருண்டி, ருவாண்டா நாடுகள் பெல்ஜியம் அரசின் கீழும், மொசாம்பிக், அங்கோலா போன்றவை போர்ச்சுகீசியர் ஆட்சியினாலும், நைஜர், செனகல், அல்ஜீரியா, துனீசியா, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, காங்கோ போன்றவை பிரான்ஸ் நாட்டின் அதிகாரத்தின் கீழும், மொராக்கோ, மேற்கு சஹாரா, நாடுகள் ஸ்பெயின் கீழும் ஆளப்பட்டன.
ஆளப்பட்டது என்பதை விட, அழிக்கப்பட்டது என்பதே உண்மை என்னும் அளவுக்கு அங்கு அராஜகங்கள் நடைபெற்றன. ஆப்பிரிக்கா என்றாலே பட்டினி சாவுகள், பஞ்சம், நிலையற்ற ஆட்சி என இன்றும் தொடர்வதன் காரணமே அங்கு ஐரோப்பிய ஆட்சியாளர்கள் செய்த அலங்கோலம் தான் என்று வரலாறு குறிப்பிடுகிறது.
0 Comments