பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை விமான நிலையத்தில் பேட்டியின் போது கூறியதாவது:–
தமிழகத்தில் ஏ.டி.எம். மையங்கள் இயங்க தொடங்கிவிட்டது. பொதுமக்கள் பணத்தை மாற்றுவதற்காக தயாராகி விட்டனர். சில இடங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏ.டி.எம். மையங்கள் இயங்கவில்லை. அவற்றை இயக்க முயற்சி செய்ய வேண்டும். இந்தியாவில் பொருளாதார புரட்சி செய்து விட்டு ஜப்பானுக்கு பிரதமர் சென்று உள்ளார். இதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகள் அதிகமாக வந்து சேரும். தமிழகத்தில் மீத்தேன் திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி கொடுத்து விட்டு இப்போது எங்களால் தடுக்கப்பட்டதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ரெயில்வே மேம்பாட்டு கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் கலந்து கொள்ளவில்லை.

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியை அதிகம் விமர்சனம் செய்கின்றனர். பா.ஜனதா கட்சி தமிழகத்தில் மறைமுகமாக கவர்னர் ஆட்சியை நடத்துகிறார்கள் என்றும், புறவாசல் வழியாக வருகிறார்கள் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். தற்போது மோடி எடுத்து வரும் நடவடிக்கைகள் மூலம் நிச்சயமாக பா.ஜனதா கட்சி பலப்படுத்தப்பட்டு நேரடியாகவே நாங்கள் வெற்றி பெறும் வாய்ப்புகள் வரும். தமிழகத்தில் கவர்னர் மூலமாக பாரதீய ஜனதா கட்சி ஆட்சியை நடத்த வேண்டிய அவசியம் இல்லை.

இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க.வை மாறி மாறி தேர்ந்தெடுக்காமல் பாரதீய ஜனதா கட்சியை வெற்றி பெற செய்தால் மத்திய, மாநில அரசுகளுக்கு பாலமாக இருப்போம். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது வேதனை அளிக்கிறது. விவசாயிகளுக்கு பல நல்ல திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.