மதுரவாயலில், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சினிமா துணை நடிகை உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். கையில் கத்தியால் வெட்டிய காயமும் இருந்தது. அவர் தற்கொலை செய்துகொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரவாயல் சீமாத்தம்மன் நகர், 1-வது தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சபர்னா (வயது 29). சினிமா துணை நடிகை. இவர், தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகம் ஆனார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு தொடரில் வில்லியாக நடித்து இல்லத்தரசிகளிடம் திட்டு வாங்கியவர். தற்போது மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘புதுக்கவிதை’ என்ற தொடரிலும் வில்லி வேடத்தில் நடித்து வந்தார்.
மேலும் ‘பூஜை’, ‘குடியரசு’, ‘காளை’ உள்ளிட்ட பல்வேறு தமிழ்ப்படங்களிலும் துணை நடிகையாக நடித்து உள்ளார்.
இவரது சொந்த ஊர் உடுமலைப்பேட்டையை அடுத்த காட்டூர் கிராமம் ஆகும். இவருடைய தந்தை அனந்தகுமார். தாயார் புஷ்பலதா. தம்பி அனீஸ். இவர்கள் அனைவரும் விருகம்பாக்கத்தில் ஒன்றாக வசித்து வருகின்றனர்.
நடிகை சபர்னா மட்டும் தனிமையில் இருக்க வேண்டும் என்பதற்காக மதுரவாயலில் உள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வாடகைக்கு வசித்து வந்தார். கடந்த சில தினங்களாக சபர்னா வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அவரது வீடு பூட்டியே கிடந்து உள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலையில் அவரது வீட்டில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம்பக்கத்தில் வசித்து வருபவர்கள் மதுரவாயல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு மதுரவாயல் போலீசார் விரைந்து சென்றனர். கதவு உள் பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. போலீசார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது நடிகை சபர்னா, நிர்வாண நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. எனவே அவர் இறந்து சுமார் 3 நாட்கள் ஆகி இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
அவரது உடலை போலீசார் சோதனை செய்த போது, அவரது இடது கையில் கத்தியால் அறுத்துக்கொண்டதற்கான காயங்கள் இருந்தது. அவரது உடலுக்கு அருகில் சிகரெட் துண்டுகள், டீ கப்புகள் ஏராளமாக கிடந்தது.
இதையடுத்து போலீசார், சபர்னாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த வீட்டில் இருந்து மெயின் ரோடு வரை ஓடிச்சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்க வில்லை.
துணை நடிகை சபர்னா இறந்து போன தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் வசித்து வந்த சினனத்திரை துணை நடிகர், நடிகைகள் ஏராளமானவர்கள் அந்த அடுக்குமாடி குடியிருப்பு முன் திரண்டனர்.
அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்த போது சபர்னாவின் டைரியை கைப்பற்றினர். அதில் அவர் தனது சாவுக்கான காரணம் குறித்து எழுதி வைத்து உள்ளாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சபர்னா, தனது கையில் கத்தியால் அறுத்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். சபர்னா, ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்ததாகவும், ஆனால் அந்த காதல் தோல்வி அடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் அவருக்கு அவரது பெற்றோர் வேறு மாப்பிள்ளை பார்த்து வந்தனர். ஆனால் சபர்னா தனது பழைய காதலை மறக்க முடியாமல் தவித்ததால் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சினையில் இந்த முடிவை எடுத்தாரா? என்பது தெரியவில்லை.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
0 Comments