சர்வதேச பாரா பேட்மிட்டன் 2021 போட்டிகள், உகாண்டா நாட்டின் தலைநகர் கம்பாலாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்க இந்திய அணி சார்பில் 54 வீரர்கள் இதற்காக உகாண்டா வந்துள்ளனர். அதில் 30 பேர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் வீரர்கள் போட்டி நடைபெறும் மைதானத்திலிருந்து சிறுது தூரத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்திய வீரர்கள் தங்கி இருந்த ஓட்டல் அருகே இன்று (16-11-2021) திடீரென குண்டு ஒன்று வெடித்துள்ளது. வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை ஓட்டல் அருகே நிறுத்திய பயங்கரவாதி வெடிகுண்டை திடீரென வெடிக்கச் செய்ததாக தெரிகிறது.. இந்த வெடிகுண்டு தாக்குதல் உகாண்டாவின் தலைமை காவல் நிலையம் அருகே நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதனால் வீரர்கள் அதிர்ந்து போன வீரர்கள் அனைவரும், அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்குள் அந்நாட்டின் பாராளுமன்றம் அருகேயும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டுகளை காரில் கொண்டு வந்து பாராளுமன்றம் அருகே அதை வெடிக்கச் செய்துள்ளனர். இதனால் அங்கு கலவர சூழல் உருவானது. வீரர்கள் அனைவரும் அதிர்ந்து போயினர்.

இந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

அதனை தொடர்ந்து உகாண்டா போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். குண்டு வெடிப்பில் வாகனங்கள் சிலவும் சேதமடைந்தன. உடனே இந்திய வீரர்கள் தங்கியிருந்த விடுதிக்கு பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டது. மேலும், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பிற்கான காரணம் தெரியவில்லை. இருப்பினும் இந்திய வீரர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தற்போது அவர்கள் அனைவரும் விளையாட்டு அரங்கிற்கு பத்திரமாக அழைத்து வரப்பட்ட நிலையில், அங்கு போட்டியில் பங்கேற்று வருகின்றனர். இது தொடர்பாக பாரா பேட்மிண்டன் மேலாளர் பத்ரி நாராயணன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

"இந்திய அணி சார்பில் பங்கேற்றுள்ள வீரர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். குண்டு வெடிப்பு நடந்த இடமும், நாங்கள் இருந்த விடுதியும் மிக அருகில் இருந்தது. ஆனாலும் நாங்கள் பாதுகாப்பாக உள்ளோம். எங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. உகாண்டா அரசு எங்கள் பாதுகாப்பை உறுதி செய்தது. பயிற்சியாளர்கள் உள்ளிட்ட அணியினருடன் வந்த அனைவரும் நலமாக உள்ளனர். கண்டிப்பாக நல்ல முறையில் விளையாடி, இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்ப்போம்" என்று கூறினார்.
Indian Para-Badminton Team

இந்நிலையில், அது மனித வெடிகுண்டு தாக்குதல் என்று கூறப்படுகிறது. அங்கு நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பலரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.