சாலை விபத்தில் சிறுவன் உயிரிழந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்காக, 1 கோடி ரூபாய் வழங்கி, இந்திய தொழிலதிபர் ஒருவர், அவரது உயிரை காப்பாற்றி உள்ளார்.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில், இந்தியாவை சேர்ந்த பெக்ஸ் கிருஷ்ணன், 45, வசித்து வருகிறார். கடந்த, 2012ம் ஆண்டு, காரில் சென்ற இவர், சாலையோரம் நின்ற குழந்தைகள் மீது மோதி விபத்துக்கு உள்ளாக்கினார். அதில், ஆப்ரிக்க நாடான சூடானைச் சேர்ந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து ஏற்படுத்திய கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினரும், கிருஷ்ணனை மன்னிக்க மறுத்துவிட்டு, தங்கள் சொந்த நாடான சூடானுக்கு திரும்பினர். இதையடுத்து இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கிருஷ்ணனுக்கு, மரண தண்டனை விதித்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதற்கிடையே, இந்திய வம்சாவளி தொழிலதிபர் யூசுப் அலி என்பவர், கிருஷ்ணனுக்கு உதவ முடிவு செய்தார்.

'லுாலு' குழுமத்தின் தலைவரான யூசுப் அலி, உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தை, அதற்காக சந்தித்து பேசினார். அவர்களுக்கு இழப்பீடாக, 1 கோடி ரூபாய் பணத்தை யூசுப் அலி வழங்கினார்.

இதையடுத்து கிருஷ்ணனுக்கு அவர்கள் பொது மன்னிப்பு வழங்கினர்.இந்நிலையில், சிறையில் இருந்த கிருஷ்ணன் நேற்று விடுவிக்கப்பட்டார். மரண தண்டனையில் இருந்து தப்பித்த அவர், உணர்ச்சிவசத்துடன், செய்தியாளர்களிடம் பேசினார். யூசுப் அலியை சந்தித்துவிட்டு, இந்தியாவுக்கு திரும்ப உள்ளதாக, அவர் தெரிவித்தார்.