"எனக்கு எந்த நோயும் இல்லை, நான் நலமாக இருக்கிறேன்" என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். திடீரென சோஷியல் மீடியாவில் அமித்ஷாவின் உடல்நிலை குறித்து சில தகவல்கள் பரவிய நிலையில், இது தொடர்பாக அமித்ஷாவே நேரடியான விளக்கத்தை அளித்து தெளிவுபடுத்தி இருக்கிறார்.
இந்தியாவில் கொரோனாவைரஸ் தொற்று வேகமாக பரவ ஆரம்பித்த நிலையில் அமித் ஷா வெளியில் வராமல் இருந்தார். அவர் குறித்து தகவல்களும் அவ்வளவாக இல்லை.

இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் போதிய உபகரணங்கள் இல்லை, வெண்டிலேட்டர் வசதி போதிய அளவில் இல்லை, பிரதமர் நிதி ஒதுக்கீடு செய்திருந்தாலும், நடைமுறை சிக்கல்கள் தீரவில்லை, இதை பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா எந்தவித பதிலோ அறிவிப்போ வெளியிடாமல் இருக்கிறார் என்றெல்லாம் செய்திகளும், தகவல்களும் கசிந்தபடியே இருந்தன.

உபி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "அமித்ஷா மூன்று மாத தனிமைப்படுத்தலில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்" என்று கூறப்போக பரபரப்பானது.. அதேபோல, காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், "லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோர் தங்கள் வீட்டுக்கு நடந்தே செல்கின்றனர், சிலர் வீட்டுக்கு செல்ல முடியாமல் திணறுகின்றனர். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒரு வார்த்தை பேசவுமில்லை, அவரை பார்க்கக் கூட முடியவில்லை" என்று காட்டமாக கூறியிருந்தார்.

இப்படி கடந்த 2 மாதமாகவே அமித்ஷாவை பற்றின தகவல்கள் வந்த நிலையில், திடீரென அவரது உடல்நிலையை குறித்த வதந்திகளும் சோஷியல் மீடியாவில் பரவிவிட்டது.. காட்டு தீ போல அந்த செய்திகள் பரவவும், இது தொடர்பாக அமித்ஷாவே ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:- கொரோனா தொற்றை எதிர்த்து நாடு போராடி வரும் நிலையில், உள்துறை அமைச்சர் என்ற முறையில் நான் கடினமாக, பாடுபட்டு உழைத்து கொண்டிருக்கிறேன்... சோஷியல் மீடியாவில் பரவும் இது போன்ற தகவல்களை எல்லாம் நான் எப்பவுமே கண்டு கொள்வதில்லை.. ஆனாலும், லட்சக்கணக்கான என்னுடைய கட்சி தொண்டர்களும் என்னுடைய நலன் விரும்பிகளும், என் உடல் நிலை பற்றி கவலைப்பட்டுள்ளனர்.

அதனால் இந்த விஷயத்தை நான் அப்படியே ஒதுக்கிவிட முடியாது. அதனால்தான் இந்த விளக்கத்தை சொல்கிறேன்.. நான் நன்றாக இருக்கிறேன். முழு உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கிறேன். எனக்கு எந்த நோயும் இல்லை என்று தெளிவான விளக்கம் அளித்துள்ளார். இதன்மூலம் பரவிவரும் வதந்திகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளியை அமித்ஷா வைத்துள்ளார்.