கொரோனா பாதிப்பில் இந்தியா சீனாவை நெருங்கி வருகிறது. இன்று ஒரே நாளில் 3, 967 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 100 பேர் மரணமடைந்துள்ளனர். இதனால், ஓரிரு நாட்களில் சீனாவை முந்திவிடும் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் கடந்த 2019 டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா தொற்று இன்று உலகமெங்கும் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களை ஆட்டி படைத்து வருகிறது. தற்போது உலகம் முழுவதும் 45, 25, 103 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 3, 03. 351 பேர் பலியாகியுள்ளனர். 17, 03, 742 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
அதிக அளவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள முதல் 5 நாடுகளில் அமெரிக்கா, ஸ்பெயின், ரஷ்யா, இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகள் வரிசையாக உள்ளன. கொரோனா தொற்று உருவான சீனா 11-வது இடத்தில் 82, 929 பேர் பாதிப்புடனும், இந்தியா 82, 085 பேர் பாதிப்புடனும் 12-வது இடத்தில் உள்ளது.
இதனால் நோய் தொற்று பாதிப்பில் சீனாவை முந்திய 10 நாடுகளின் பட்டியலுடன் இந்தியா விரைவில் இணைய உள்ளது. இந்தியாவில், கொரோனா வைரஸ் மொத்த பாதிப்பு 82 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3, 967 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது 2-வது அதிகபட்ச பாதிப்பாகும்.
தொடர்ந்து 5-வது நாளாக 3, 500 க்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பலி எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 100 ஆக உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று 1, 602 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 27, 524 ஆகவும், டெல்லியில் 8, 470 ஆகவும் உள்ளது.
மத்தியபிரதேசத்தில் புதியதாக 314 பேருக்கும், ராஜஸ்தானில் 206 பேருக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வருகையால் வடகிழக்கு மாநிலங்களில் பாதிப்பு படிப்படியாக அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், 2-ம் இடத்தில் இருந்த குஜராத்தை முந்திக்கொண்டு 3-ம் இடத்தில் இருந்த தமிழகம், தற்போது 9, 974 என்ற பாதிப்பு அளவில் 2-ம் இடத்தில் உள்ளது.
இருப்பினும் தமிழ்நாடு, குஜராத் ஆகிய இரு மாநிலங்களிலும் வைரஸ் தொற்று படிப்படியாக குறைய தொடங்கி உள்ளதாக தெரிகிறது. கடந்த சில வாரங்களில் முதல்முறையாக 500-க்கும் குறைவான பாதிப்பு தமிழ்நாட்டில் பதிவாகி உள்ளது.
நேற்று தமிழகத்தில் 447 பேருக்கும், குஜராத்தில் 324 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் தகவலின்படி, நாட்டின் மொத்த பாதிப்பு 82, 085 ஆகவும், பலி எண்ணிக்கை 2, 640 ஆகவும், குணமடைந்தோர் 27, 979 ஆகவும் உள்ளது.


0 Comments