புதிய 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை தொடர்ந்து, அடுத்தகட்டமாக ஆயிரம் ரூபாய் நோட்டுகளை விரைவில் அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் அனுமதியுடன் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன், ஆயிரம் ரூபாய் நோட்டை அச்சடிக்கும் பணியை ரிசர்வ் வங்கி தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்காக, புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வடிவமைக்கும் பணியும், பாதுகாப்பு அம்சங்களை வரையறை செய்யும் பணியும் தீவிரவமாக நடந்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மைசூர் மற்றும் சல்போனி ஆகிய இடங்களில் உள்ள நோட்டு அச்சடிக்கும் மையங்களில் 1000 ரூபாய் நோட்டுக்களை மீண்டும் அச்சடிப்பதற்கான பணிகள் தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் 1000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சிலர் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.