சவுதி செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தியில் ரியாத் (சவுதி அரேபியா) அண்டைய நாடான கத்தாருடன் தூதரக உறவுகளை நிறுத்திக் கொண்டது, தேசத்தை பயங்கரவாதத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்ள கத்தாருடனான எல்லையை மூடியது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கத்தார் உடனான இராஜதந்திர மற்றும் தூதரக உறவுகளை துண்டிக்க, அந்நாட்டுடனான தரை மற்றும் கடல்வழி மற்றும் வான்வழி தொடர்பையும் துண்டிக்க சவுதி அரேபியா முடிவு செய்து உள்ளதாக அந்நாட்டு அதிகாரி கூறியதாக என செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக கத்தார் அதிகாரிகளால் நடத்தப்பட்ட வன்முறை காரணமாக இந்த தீர்க்கமான முடிவு எடுக்கப்படுவதாக சவுதியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஐக்கிய அரபு எமிரெட்சும் கத்தார் உடனான உறவை துண்டிப்பதாக அறிவித்து உள்ளது.
எகிப்து நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகமும் கத்தார் பயங்கரவாதத்திற்கு துணை செல்கிறது என கூறி, அந்நாட்டுடனான உறவுகளை துண்டிப்பதாக அறிவித்து உள்ளது. கத்தார் உடனான வான் மற்றும் கடல்வழி போக்குவரத்து நிறுத்திக் கொள்ளப்படும் எனவும் அறிவித்து உள்ளது. பாதுகாப்பு காரணமாக கத்தாருடனான எங்களுடைய உறவை முறித்துக் கொள்கிறோம் என பக்ரைனும் கூறிஉள்ளது.

ஏமன் நாட்டுல் கடந்த 2 வருடங்களாக பயங்கரவாதத்திற்கு எதிராக சவுதி தலைமையிலான அரபிக் படையானது சண்டையிட்டு வருகிறது. இந்த கூட்டப்படையில் இருந்து கத்தார் நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கத்தார் அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ். போன்ற பயங்கரவாத இயக்கத்திற்கு துணை நிற்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. கத்தார் அரசு பயங்கரவாதத்திற்கு உதவிசெய்கிறது என்ற குற்றச்சாட்டு நீடித்த நிலையில் இப்போது 4 நாடுகள் அந்நாட்டுடனான உறவுகளை துண்டித்தது வளைகுடா நாடுகளில் பிளவு ஏற்பட்டு உள்ளதை காட்டுகிறது.
கத்தார் பயங்கரவாதத்திற்கு நிதி உதவி வழங்குவதாக குற்றம் சாட்டி அமெரிக்க ஊடகங்களில் கட்டுரைகளும் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments