அரபு நாடுகளின் நடவடிக்கையால் கத்தாரில் வசிக்கும் இந்தியர்கள் பீதி அடைய தேவை இல்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

கத்தார் நாட்டுடனான தூதரக உறவை அமீரகம், சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, ஏமன் ஆகிய 5 நாடுகள் நேற்று திடீரென துண்டித்தன. பயங்கரவாத செயல்களுக்கு துணை போகும் வகையில் கருத்துகளை தெரிவித்ததற்காகவும், அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் செயல்பட்டு வருவதற்காகவும் கத்தார் மீது இந்த நடவடிக்கையை மேற்கண்ட 5 நாடுகள் எடுத்துள்ளன.
அமீரகத்தில் தங்கியிருக்கும் கத்தார் நாட்டை சேர்ந்தவர்கள் 14 நாட்களுக்குள் நாடு திரும்பவும், தூதரக அதிகாரிகள் 48 மணி நேரத்துக்குள் வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல் கத்தார் நாட்டு விமானங்கள் தங்கள் நாட்டுக்குள் வரவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
26 லட்சம் மக்கள் தொகை கொண்ட கத்தார் நாட்டில் 6½ லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் எரிவாயு நிறுவனம் மற்றும் கட்டுமான துறையில் பணியாற்றி வருபவர்கள் ஆவர். 2022-ம் ஆண்டு கத்தாரில் நடைபெற இருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்காகவும் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.
9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.58 ஆயிரம் கோடி) வர்த்தகத்துடன் கத்தார் இந்தியாவின் 19-வது பெரிய வர்த்தக கூட்டணி நாடாக திகழ்கிறது.
கத்தார் மீது அரபு நாடுகள் எடுத்துள்ள நடவடிக்கையின் காரணமாக இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது பற்றி பெட்ரோநெட்டின் நிதித் தலைவர் ஆர்.கே. கார்க் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இதில் எந்த வித தாக்கமும் ஏற்படும் என்று நினைக்கவில்லை. நமக்கு கத்தாரில் இருந்து நேரடியாக எரிவாயு கிடைக்கிறது. எனவே எரிவாயு-எரிசக்தி இறக்குமதி உடனடியாக பாதிக் கும் வாய்ப்பில்லை” என்றார்.
மத்திய அபிவிருத்தி ஆய்வு மையத்தின் மூத்த அதிகாரி இருதயராஜன் கூறுகையில், “கத்தாரில் வசிக்கும் இந்தியர்கள் பீதி அடைய தேவையில்லை. அங்குள்ள இந்தியர் களுக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையால் நிச்சயம் தெற்காசிய நாட்டவர்களுக்கு கத்தாரில் எதிர்கால பலன்களே அதிகம்” என்றார்.
அதே நேரம், கத்தார் விமானங்கள் தங்களது நாட்டுக்குள் நுழைய தடை விதித்து இருப்பதால் கத்தார் தலைநகர் தோகாவை மையமாக வைத்து மற்ற அரபு நாடுகளுக்கு விமான பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களுக்கு சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.
வளைகுடா நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த திடீர் நெருக்கடி காரணமாக சர்வதேச சந்தையில் எண்ணெயின் விலை அதிகரிக்கும் என கருதப்படுகிறது.
0 Comments