மத்திய நிதித்துறை மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களீடம் கூறியதாவது:-
நாட்டில் புழக்கத்தில் உள்ள 86 சதவீத ரூபாய் நோட்டுக்களை மாற்றும் மிகப்பெரிய பணி நடைபெற்று வருகிறது. இதற்காக வங்கி ஊழியர்கள் காலை முதல் இரவு வரை வேலை செய்கின்றனர். முதல் சில நாட்கள் சில அசவுகரியங்கள் இருக்கும். பொதுமக்களும் தங்களுக்கு சிரமங்கள் இருந்தாலும் ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள 2 லட்சம் ஏ.டி.எம்.-களில் புதிய ரூபாய் நோட்டுக்களை விநியோகம் செய்யும் வகையில் அளவுத்திருத்தம் செய்வதற்கு 2 வாரங்கள் வரை ஆகலாம். ரூபாய் நோட்டு மாற்றம் மற்றும் பணப் பரிமாற்றத்தை நிதி அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இன்று மதியம் வரை 2 கோடியே 28 லட்சம் பேர் பணப் பரிவர்த்தனை செய்துள்ளனர். பண தட்டுப்பாட்டை போக்க நிதித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன்.

ஸ்டேட் வங்கியில் மட்டும் கடந்த இரண்டு தினங்களில் 2.28 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ன. இரண்டு நாட்களில் ரூ.47868 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வங்ககளிலும் செய்யப்படும் மொத்த டெபாசிட் ரூ.2 கோடி முதல் 2.25 லட்சம் கோடி வரை இருக்க வேண்டும். நகை வர்த்தகத்தில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளை அரசு அனுமதிக்காது. ரூபாய் நோட்டுகளில் சிப் இருக்கும் என்று வெளியான தகவல் வெறும் வதந்தி, அவ்வாறு சிப் எதுவும் ரூபாய் நோட்டுகளில் பொருத்தப்படவில்லை”

இவ்வாறு அவர் கூறினார்.